முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 22


பங்குச்சந்தை ஆத்திச்சூடி..- 22


சென்ற வாரங்களில் குவான்டிடேட்டிவ் அனாலிசிஸில் முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள் பற்றி கண்டோம். இனி சற்று ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபவர்களுக்கு உண்டான அளவீட்டு முறைகள் பற்றி பார்ப்போம். விகிதாசார ஆய்வு (ரேஷியோ அனாலிசிஸ்) என்பது ஃபைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும். சிறிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்...
ங்களது சம்பளம் மாதத்துக்கு 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு மாதத்திற்கு 6,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை, உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40% (8,000/20,000). இப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்குப் பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள். ஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% (7,000/20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்கிறீர்கள்.

இதேபோலத்தான் நீங்கள் வாங்கப்போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம். ரேஷியோ அனாலிசிஸ் ஒரு பெரிய கடல் என்றாலும், அதில் முக்கியமான சில விகிதாசாரங்களை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம். விகிதாசாரங்களை லாப அடிப்படையில், ஆபரேஷன்ஸ் அடிப்படையில், நிர்வாகத் திறமையின் அடிப்படையில், கடன் அடிப்படையில் என பலவாறாகப் பிரித்துக் கொள்ளலாம். நாம் இங்கு சில முக்கியமான விகிதங்களைப் பார்ப்போம். முதலில், லாபத்தை அடிப்படையாகக் கொண்ட சில விகிதங்களை முதலில் பார்ப்போம்...
பெல் நிறுவனத்தின் மார்ச் 2010-ல் முடிந்த 'இன்கம் ஸ்டேட்மென்ட்கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேட்மென்ட் ஒரு பொது வடிவத்தில் உள்ளது. இதில் அந்நிறுவனத்தின் நிகர விற்பனை 33,226.25 கோடி ரூபாயாகும்; மேலும் ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் 786.65 கோடி ரூபாயாகும். அந்நிறுவனத் தின் மொத்த செலவுகள் 27,913.71 கோடியாகும். அதன் ஆபரேட்டிங் லாபம் 6,099.19 கோடியாகும் (33,226.25 + 786.65 - 27,913.71).
ஆபரேட்டிங் பிராஃபிட் என்பது வட்டி, தேய்மானம் மற்றும் வருமான வரிக்கு முன்பான லாபம். அதாவது, நிகர விற்பனையிலிருந்து விற்பனைக்கு நேரடியாக உள்ள செலவுகளைக் கழித்தால் கிடைப்பது. இப்போது அந்நிறுவனத்தின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் என்னவென்று பார்ப்போம்...
[ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் = ஆபரேட்டிங் பிராஃபிட்/நிகர விற்பனை]
அதன்படி பெல்லின் மார்ச் 2010-ல் முடிந்த நிதி ஆண்டின் ஆபரேட்டிங் பிராஃபிட் மார்ஜின் 18.4% (6,099.19/33,226.25) ஆகும்.
அதைப்போல நெட் பிராஃபிட் (நிகர லாப) மார்ஜினும் மிகவும் உபயோகமான ஒன்று.
[நெட் பிராஃபிட் மார்ஜின் = நெட் பிராஃபிட்/ மொத்த வருமானம்]
நிகர விற்பனையுடன் மற்ற வருமானம் மற்றும் ஸ்டாக் கூட்டி குறைவதைச் சேர்த்துக் கொண்டால் மொத்த வருமானம் கிடைக்கும். பெல் நிறுவனத்துக்கு அவ்வருடம் பிற வருமானங்கள் (இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமோ அல்லது சொத்துக்களை விற்றதன் மூலமோ அல்லது வேறு ஏதேனும் செய்யும் தொழில் சாராததிலிருந்து வரும் வருமானம்) 1,085.73 கோடி ரூபாயாகும். ஸ்டாக் அட்ஜஸ்ட்மென்ட் 786.65 கோடி. ஆக, அந்த வருட மொத்த வருமானம்  35,098.63 கோடியாகும். நிகர லாபம் 4,310.64 கோடியாகும். இந்த நிகர லாபத்திற்கும் மொத்த வருமானத்திற்கும் உள்ள விகிதம்தான் நெட் பிராஃபிட் மார்ஜின். பெல்லின் மார்ச் 2010 நிகர லாப மார்ஜின் 12.30% (4,310.64/35,098.63) ஆகும். இந்த விகிதம் மூலம் ஒவ்வொரு ரூபாய் விற்பனைக்கும் லாபம் எவ்வளவு என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
இதுதவிர மூலப் பொருட் களுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; விற்பனை, நிர்வாகம் மற்றும் பொதுச் செலவுகளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம்; மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கும் விற்பனைக்கும் உள்ள விகிதம் என நமது ஆய்வின் தேவைக்கு ஏற்றாற்போல் பலவிதமான விகிதங்களை கணக்கிட்டு கொண்டே செல்லலாம். இவ்விகிதங்களைக் கணக்கிடுவது பெரிதல்ல. கணக்கிடுவதோடு அந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் விகிதம் எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வாங்கப்போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரியும் - சேமிப்பில் உங்கள் நண்பரை ஒப்பிட்டது போல!
இன்னும் சில முக்கியமான விகிதங்களைப் பற்றி கீழே பார்ப்போம். சிறிய தொழில் செய்யும் பலர் தங்களிடம் எவ்வளவு சரக்கு (இன்வென்டரி) உள்ளதோ அவ்வளவு தங்களுடைய தொழில் பலமாக உள்ளது என்று நினைப்பார்கள். ஆனால், பெரிய தொழில் நிறுவனங்கள் அப்படி நினைக்காது. காரணம், நாம் நூற்றுக்கணக்கான கோடிகளில் உள்ள சரக்குகளைப் பற்றி பேசுகிறோம். இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் ஜப்பானியர்கள் அறிமுகப்படுத்திய 'ஜஸ்ட் இன் டைம் இன்வென்டரி மேலாண்மைஇன்று பரவலாக உபயோகப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருந்துக்கடைக்காரர். உங்களின் தினசரி விற்பனை 20,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு சுமாராக 72 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்கள். உங்கள் கடையில் எப்போதும் இருக்கும் சரக்கோ 12 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் உங்கள் சரக்கின் சுழற்சி 6 (72/12) ஆகும். இந்த சுழற்சியை நீங்கள் கூட்ட முடிந்தால் உங்களின் லாபம் உறுதியாக கூடும். பெல் நிறுவனத்தின் சரக்கு சுழற்சி என்னவென்று கீழே பார்ப்போம்.
[இன்வென்டரி டர்னோவர் = ஆண்டின் விற்பனை/ ஆண்டு முடிவில் உள்ள சரக்குகளின் மதிப்பு]
பெல் நிறுவனத்தின் ஆண்டு இறுதி இன்வென்டரி (பாலன்ஸ் ஷீட்டில் கிடைக்கும்) 9,235.46 கோடியாகும். அவ்வருட நிகர விற்பனை 33,226.25 கோடி என நமக்குத் தெரியும். ஆக, பெல் நிறுவனத்தின் இன்வென்டரி டர்னோவர் 3.6 (33226.25/9235.46) ஆகும். இந்த இன்வென்டரி டர்னோவர் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது. அத்தனை முறை நிறுவனம் தன்னிடம் உள்ள சரக்குகளை சுழலச் செய்துள்ளது என்று பொருள்.
மேற்கண்ட ரேஷியோக்களைப் போல, ஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப்போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள். இதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிற்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோஎனக் கூறுவர். பெல் நிறுவனத்தின் மொத்தக் கடன் மார்ச் 2010 முடிவில் 127.75 கோடி ரூபாயாகும். அவ்வாண்டு பங்கு மூலதனம் மற்றும் ரிஸர்வ்ஸ் 15,917.36 கோடி ரூபாயாகும். ஆகவே, அதன் 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ’ 0.008 (1%-ற்கும் குறைவு) (127.75/15,917.36) ஆகும். இதுவே சில நிறுவனங்களுக்கு 100% அல்லது 200% என்றுகூட இருப்பது உண்டு. உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதுபோல் அதிகக் கடன் இருந்தால், பொருளாதாரம் சீர்குலையும்போது, அந்த  நிறுவனங்கள் மூலைக்குத் தள்ளப்படும்.
[டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ = மொத்தக் கடன்/ ஷேர்ஹோல்டரின் நிதி]
ரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தித் துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும். உதாரணமாக,  ரீடெய்ல் துறையில் டர்னோவர் ரேஷியோ அதிகமாக இருக்கும். நிதித்துறை நிறுவனங்கள் மற்றும் மின்சாரத்துறை நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் இருக்கலாம். ஆகவே ரேஷியோக்களை அதன் துறை சார்ந்த, ஒரே அளவிலான நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே சரி.
(படி ஏறுவோம்)

Source - Vikatan Magazine

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவகிரக துதி

சூரியன் சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி! சூரியா போற்றி! சுந்தரா போற்றி! வீரியா போற்றி! வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி! திருவருள் தருவாய் சந்திரா போற்றி! சற்குணா போற்றி! சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி! அங்காரகன் (செவ்வாய்) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ மங்கள செவ்வாய் மலரடி போற்றி! அங்காரகனே அவதிகள் நீக்கு! புதன் இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி போற்றி! பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே உதவியே யருளும் உத்தமா போற்றி! குரு குணமிகு வியாழக் குருபகவானே மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ; பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய் சுக்கிரன் சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய் வக்ரமின்றி வரமிகத் தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே சனி சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே! மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே இச்சகம் வாழ இன்னருள் தா தா ராகு அரவெனும் ராகு அய்யனே போற...

சோப் ஆயிலில் சூப்பர் லாபம்!

வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் இயந்திரங்கள் எதுவும் இல்லாமல் சோப் ஆயில் தயாரிக்கலாம். இதன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காளம்பாளையத்தில் ஹக் புராடக்ட்ஸ் சோப் ஆயில் தயாரிக்கும் ரமணன். அவர் கூறியதாவது: கோவையில் தேசிய பஞ்சாலை கழக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் உதவி ஸ்பின்னிங் மாஸ்டராக 28 ஆண்டுகள் பணிபுரிந்தேன். 7 ஆண்டுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றேன். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற என் போன்றவர்களை, கோவையில் உள்ள சிறு தொழில் சேவை மையத்தினர் சுய தொழில் செய்வதற்கான பயிற்சிக்கு அழைத்தனர். அங்கு ஒரு மாதம் நறுமண சொட்டு நீலம், பினாயில், சோப் பவுடர் போன்றவை தயாரிக்க கற்றுக் கொடுத்தனர். ரூ.5 ஆயிரம் முதலீட்டில் சோப் ஆயில் தயாரிப்பதற்கான தொழிலை துவக்கினேன். நானே முதலாளியாகவும், தொழிலாளியாகவும் இருந்து மாதம் 200 லிட்டர் சோப் ஆயில் தயாரித்து விற்கிறேன். சோப் ஆயில் தயாரித்து விற்பவர்கள் பலர் இருந்தாலும், தரமாக தயாரித்து விற்பதால் ஆர்டர் தொய்வு இல்லாமல் கிடைக்கிறது. தினசரி 5 மணி நேரம் உழைத்தால் 10 லிட்டர் சோப் ஆயில் தயாரிக்க முடியும். 20...

Various Herbs & Spices English & Hindi Names

English/ ஆ ங்கிலம் Tamil/ தமிழ் Hindi/ हिन्दी/ ஹிந்தி Rice Arisi( அரிசி) Chaval Black gram Kadalai Parruppu ( கடலை பருப்பு) Channa Dhal Black Gram Ulluththam Paruppu ( உளுதம் பருப்பு) Urad Dhal Green gram dhal Payaththam Parruppu( பயத்தம் பருப்பு) Moog Dhal Green gram Whole Paasi Parruppu( பாசி பருப்பு) Moog Sabut Yellow split peas Thuvaram Parruppu( துவரம் பருப்பு) Toor Dhal Green gram  Split Pachchai payiru( பச்சைப்பயறு) Moong Chilka Garbanzo beans Kondai Kadalai( கொண்டை கடலை) Kabuli Channa Peanuts Veerkadalai( வேற்கடலை) Moong falee All Purpose Flour Maida Maavu( மைதா மாவு) Maida Gram flour Kadalai Maavu( கடலை மாவு) Besan Wheat flour Godhumai maavu( கோதுமை மாவு) ...